ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம்

நோக்கங்கள்

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பனைத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைப்புகள் மூலம் பனைத் தொழிலை நிலைபெறச் செய்து மேம்படுத்துதல், பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பனை பொருட்களின் உற்பத்தியை அதிகரித்திட நிறுவன ரீதியான உதவிகளை வழங்குதல், பனைத் தயாரிப்புக்கான வாழ்வாதாரத்திற்கான கூட்டுறவு தளத்தை அமைப்பது போன்றவை பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

பனை வெல்ல கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள்

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 720 ஆரம்ப பனை வெல்லம் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், எட்டு மாவட்ட பனை வெல்லம் விற்பனை கூட்டுறவு சம்மேளனங்கள் மற்றும் ஒரு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் பனைப் பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் விற்பனை செய்வது போன்ற பணிகளில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றன.

பனை பொருட்கள்

பனை பொருட்களில் முதன்மையானது பதநீர் ஆகும். பனை வெல்லம் (கருப்பட்டி), பனங்கற்கண்டு, பனஞ்சர்க்கரை, பனங்கற்கண்டு மிட்டாய், கருப்பட்டி அல்வா, கருப்பட்டி சாக்லேட் போன்ற பல்வேறு பனை உணவுப் பொருட்கள் பதநீரை மூலப் பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. பருவ காலத்தில் பனை மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள பனை மரங்களிலிருந்து இறக்கப்படும் பதநீர் மக்கள் விரும்பி அருந்தக்கூடிய ஒரு பிரபலமான இயற்கையான பானமாகும்.

பனையிலிருந்து உண்ணாப் பொருட்களான பனந்தும்பு தூரிகைகள், பனை ஓலை விசிறிகள், பாய்கள், பனை ஓலையினாலான பல்வேறு கூடைகள், பனை நார் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான இயற்கையான வண்ணம் பூசப்பட்ட மற்றும் வண்ணம் பூசப்படாத கைவினைப் பொருட்கள் போன்றவை பனைத் தொழில் கைவினைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன.

பதநீர் இறக்குவதற்கான உரிமம்

பதநீர் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் முறையான உரிமத்தின் மூலம் மட்டுமே பதநீர் இறக்கவும் மற்றும் அதை விற்பனை செய்யவும் வேண்டுமென்று அரசு ஆணையிட்டுள்ளது. அவ்வாணையின்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் பதநீர் இறக்குவதற்கான உரிமத்தினை தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தினால் புதுப்பித்து வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2020-2021-ஆம் நிதி ஆண்டில் கதர் கிராமத் தொழில்களின் உதவி இயக்குநர்கள் மூலமாக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த 9972 பனைத் தொழில் கைவினைஞர்களுக்கு பதநீர் இறக்கவும் அதனை விற்பனை செய்யவும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

நிருவாகம்

வரவு செலவு திட்ட ஒதுக்கீடு என தனியே தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்திற்கென ஏதுமில்லை. தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் பணியாளர்கள் அனைவரும் தலைமைச் செயல் அலுவலர் (அலுவலால்) உட்பட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் பணியமைப்பிலிருந்து அனுமதிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலரே தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆரம்ப பனை வெல்லம் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மற்றும் மாநில பனை வெல்லம் விற்பனை கூட்டுறவு சம்மேளனங்கள் ஆகியவற்றிற்கு செயற்பதிவாளர் ஆவார்.

உட்கட்டமைப்பினை உருவாக்குவதற்கான உதவிகள்

தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்தின் உற்பத்தி திறனை அதிகரித்திட, கடலூர் மாவட்டத்தில் உள்ள மண்டல பனை பொருள் பயிற்சி நிலைய வளாகத்தில் பனை வெல்லம் உற்பத்தி அலகு ரூ.3.60 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

பனைத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளித்திடும் நோக்கத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 100 பனைத் தொழில் கைவினைஞர்களுக்கு ரூபாய் 6 இலட்சம் மதிப்பீட்டில் பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி திருநெல்வேலி மாவட்ட பனை பொருள் விற்பனை கூட்டுறவு சம்மேளனத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

பனை பொருட்கள் மற்றும் சுக்கு காபி விற்பனை

இயற்கை பானங்கள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக பொது மக்களிடம் நல்லதொரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்பது வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பனைவெல்லம் கலந்த சுக்கு காபி சென்னையில் பல்வேறு பிரதான இடங்களான சென்னை பெருநகர மெரினா கடற்கரை, குறளகம் மெட்ரோ இரயில் நிலையம் அருகில், கோயம்பேடு புறநகர் பேருந்து முணையம், தீவுத்திடல் போன்ற பல்வேறு இடங்களில் விற்பனை துவங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது.

மேலும், சேலம், ஏற்காடு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருநெல்வேலியில் உள்ள பாளையம்கோட்டை, ஊட்டி, இராமநாதபுரத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலப் பாதையில் சுக்கு காபி, கதர் கிராமத் தொழில் பொருட்கள் மற்றும் பனை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பல்வேறு வகையான பனை பொருட்களின் விற்பனையை அதிகரித்திட பிரத்யேகமான ஒரு பனை பொருள் விற்பனை நிலையம் சென்னை குறளகம் தரை தளத்தில் செயல்பட்டு வருகிறது.

பனை பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை

கடந்த ஐந்து ஆண்டுகளில் பனை பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை விவரங்கள் பின்வருமாறு:-

(ரூ. இலட்சத்தில்)

ஆண்டு

உற்பத்தி

விற்பனை

2016-2017

1344.97

1484.30

2017-2018

1463.12

1629.23

2018-2019

1516.95

1658.96

2019-2020

1748.78

1892.73

2020-2021

1511.03

1623.49

2021-2022

(ஜூலை 2021 வரை)

432.83

488.45