ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896

கிராமத் தொழில்கள்

கிராமங்களில் வசிக்கும் கைவினைஞர்களின் மனித ஆற்றலைப் பயன்படுத்தி அவர்களின் பாரம்பரிய திறமைகளை வெளிக்கொணர்ந்து, கிராமப்புறங்களில் கிடைக்கும் மூலப்பெருட்களைக் கொண்டு இலாபகரமான வேலை வாய்ப்பினை உருவாக்கி அவர்தம் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதே கிராமத் தொழில்களின் முக்கிய நோக்கமாகும். ஊரகப் பகுதியில் வாழும் கைவினைஞர்களின் சுயசார்பு நம்பிக்கையினை மேம்படுத்தி அவர்தம் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதுடன் மனதிடத்தினை வளர்க்கவும் கிராமத் தொழில்கள் உதவுகின்றன.

வாரியத்தின் கீழ் 35 கிராமத் தொழில் உற்பத்தி அலகுகள் இயங்கி வருகின்றன.

6.1 சோப்பு அலகுகள்

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் 7 குளியல் சோப்பு அலகுகள், 2 பார் சோப்பு அலகுகள், 2 டிடர்ஜெண்ட் சோப்பு அலகுகள், என மொத்தம் 11 சோப்பு அலகுகள் செயல்பட்டு வருகின்றன. கதர் கிராமத் தொழில் வாரியத்தின் வருவாயை பெருக்குவதில் சோப்புத் தொழில் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்த சோப்பு அலகுகளில் குமரி, மூலிகா, நித்தம், வேம்பு, சந்தனம், கார்பாலிக் மற்றும் பொய்கை போன்ற குளியல் சோப்பு வகைகள் 7 அலகுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குமரி சோப்பு, மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குவதுடன், சந்தையில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

”கோபுரம்” என்னும் வணிகக் குறியீட்டுடன் கிளீனிங் பவுடர், டிடர்ஜெண்ட் சோப்பு, டிடர்ஜெண்ட் சலவைத் தூள் மற்றும் பார் சோப்பு போன்றவைகள் 4 சோப்பு அலகுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மக்களிடம் பிரசித்திபெற்ற காதி வகை சோப்புகள் பொது விநியோக கடைகள் மூலம் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வாரிய சோப்புகள் தரமாகவும், விலை மலிவாக உள்ளதால் மக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்படுகிறது. தற்போது வாரிய சோப்பு வகைகளை இணையவழி மூலம் விற்பனை செய்வதுடன் மாநிலத்திலுள்ள பல்பொருள் அங்காடிகள் (Departmental Stores) மூலமாகவும் விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கதர் வளாகத்தில் ஷாம்பு, குளியல் திரவம் மற்றும் கைக்கழுவும் திரவம் உற்பத்தி செய்திடும் அலகு செயல்பட்டு வருகிறது.

2020-2021 ஆம் நிதி ஆண்டில் உற்பத்தி மற்றும் விற்பனை முறையே ரூ.995.53 இலட்சம் மற்றும் ரூ 999.12 இலட்சம் மதிப்பிற்கு எய்தப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் நிதி ஆண்டில் ஜூலை’2021 வரை உற்பத்தி மற்றும் விற்பனை முறையே ரூ.425.87 இலட்சம் மற்றும் ரூ 358.70 இலட்சம் மதிப்பிற்கு எய்தப்பட்டுள்ளது.

6.2 தச்சு மற்றும் கருமாரத் தொழில்

தொன்மை வாய்ந்த கிராமத் தொழில்களில் தச்சு மற்றும் கருமாரத் தொழில் கிராமப்புற கைவினைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பினை அளிக்கிறது.

ஐந்து தச்சு மற்றும் கருமார அலகுகள் கீழ்கண்ட இடங்களில் இயங்கி வருகின்றன.

1. திருவள்ளூர் மாவட்டத்தில் வீரராகவபுரம்,

2. இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம்,

3. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா,

4. மதுரை மாவட்டத்தில் நாகமலை – புதுக்கோட்டை,

5 திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை.

மேற்காணும் அலகுகளில், மரம் மற்றும் இரும்பிலான தளவாடங்கள் அரசுத் துறைகள், நீதிமன்றங்கள், பல்கலைக் கழகங்கள், இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாவட்ட நூலகங்களுக்கு தேவையின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மட்பாண்ட தொழிலாளர்கள் உடலுழைப்பை குறைத்து உற்பத்தியினை அதிகரித்திட மாறுபட்ட வேகத்துடன் கூடிய ’சீலாவீல்’ மின்சக்கரம் , அரக்கோணம் மற்றும் பள்ளி கொண்டா தச்சு கருமார அலகுகளில் உற்பத்தி செய்யப்பட்டு, அரசால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

2020-2021 ஆம் ஆண்டில் ரூ.772.92 இலட்சம் மதிப்பிலான தச்சு மற்றும் கருமாரத் தொழில் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.633.89 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் பல்வேறு துறைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2021-2022 ஆம் நிதி ஆண்டில் ஜூலை’2021 வரை ரூ.291.10 இலட்சம் மதிப்பிலான தச்சு மற்றும் கருமாரத் தொழில் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.285.36 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் பல்வேறு துறைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

6.3 காலணி அலகுகள்

வாரியத்தின் மிகவும் பழமை வாய்ந்த தொழில்களுள் காலணி உற்பத்தித் தொழிலும் ஒன்றாகும். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 10 காலணி உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன. அரசுத் துறைகளுக்கு, கோப்புகளை எடுத்து செல்லும் கோப்பு பெட்டிகள், மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் காயர் மெத்தைகள், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான காலணிகள், நடத்துனர் பணப்பைகள், கையுறைகள் மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கான காலணிகள் ஆகியவை காலணி உற்பத்தி அலகுகள் மூலம் சிறந்த முறையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

2020-2021 ஆம் ஆண்டில் வாரியம் ரூ.72.69 இலட்சத்திற்கு தோல் பொருட்களை உற்பத்தி செய்து ரூ.57.21 இலட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது.

2021-2022 ஆம் நிதி ஆண்டில் ஜூலை’2021 வரை வாரியம் ரூ.11.66 இலட்சத்திற்கு தோல் பொருட்களை உற்பத்தி செய்து ரூ.7.92 இலட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது.

6.4 தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்புத் தொழில் கிராமத் தொழில்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேனீ வளர்ப்புத் தொழிலில் சுமார் 10,000 தேனீ விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தேனீ விவசாயிகளிடமிருந்து பச்சைத் தேன் இடைத்தரகர் இன்றி கிலோ ரூ.140/- என்ற விலையில் வாரியத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட பச்சைத் தேன் மார்த்தாண்டத்தில் உள்ள அம்சி தேன் பதப்படுத்தும் நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு தரம் பரிசோதிக்கப்பட்டு, ”அக்மார்க்” தரச் சான்று பெற்று கதர் அங்காடிகளுக்கு விற்பனை செய்யும் பொருட்டு அனுப்பப்படுகின்றன.

2020-2021 ஆம் ஆண்டில் ரூ.93.88 இலட்சம் மதிப்புள்ள பச்சைத் தேன் பதப்படுத்தப்பட்டு ரூ.143.93 இலட்சம் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் நிதி ஆண்டில் ஜூலை’2021 வரை ரூ.29.95 இலட்சம் மதிப்புள்ள பச்சைத் தேன் பதப்படுத்தப்பட்டு ரூ.42.31 இலட்சம் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

6.5 கைமுறை காகித அலகுகள்

விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், கடலூர் மாவட்டத்தில் வடலூர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவனூர், ஈரோடு மாவட்டத்தில் செண்பகபுதூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஆகிய 5 கைமுறை காகித அலகுகள் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவ்வலகுகளில் கச்சா அட்டைகள், கோப்பு அட்டைகள், பாண்டு தாள்கள், அலுவலக உறைகள், மேலுறைகள், எக்ஸ்ரே உறைகள், அட்டைப் பெட்டிகள் மற்றும் எழுது தாட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கச்சா அட்டைகள் மத்திய சிறைச்சாலைக்கும், எக்ஸ்ரே உறைகள் அரசு மருத்துவமனைகளுக்கும், அலுவலக உறைகள், கோப்பு அட்டைகள் மற்றும் மெல்லிய உறைகள் அரசு துறைகளுக்கும், பாண்ட் தாள்கள் நீதிமன்றங்களுக்கும் தேவையின் அடிப்படையில் விற்பனை செய்யப்பபடுகின்றன.

2020-2021 ஆம் ஆண்டில் உற்பத்தி ரூ.36.07 இலட்சமும் விற்பனை ரூ.34.32 இலட்சமும் எய்தப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் நிதி ஆண்டில் ஜூலை’2021 வரை உற்பத்தி ரூ.8.58 இலட்சமும் விற்பனை ரூ.7.02 இலட்சமும் எய்தப்பட்டுள்ளது.

6.6 மண்பாண்டத் தொழில்

மண்பாண்டத் தொழில் தமிழகத்தின் பண்டைகாலத் தொழில்களில் ஒன்றாகும். இத்தொழில், கிராமப்புறங்களில் வசிக்கும் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு உதவுகிறது. சுமார் 3,500 உறுப்பினர்களை கொண்டு 34 மண்பாண்ட கூட்டுறவு சங்கங்கள் வாரியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன.

மழைக்காலங்களில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னல்களை போக்கிட 2017-2018-ஆம் ஆண்டு முதல் தேர்வு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,000/- மழைக்கால பராமரிப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 2020-2021-ஆம் ஆண்டில் காதி வாரிய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த 11,957 மண்பாண்டத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.

ஏற்கனவே, மின்சாரத்தால் மாறுபட்ட வேகத்தில் இயங்கும் 4,000 ’சீலா வீல்’ மின்சக்கரங்கள் 4,000 மண்பாண்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும், 2,000 ’சீலாவீல்’ மின் சக்கரங்கள் உற்பத்தி செய்து பயனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6.7 இதர கிராமத் தொழில் அலகுகள்

6.7.1 வேடப்பட்டி ஜவ்வாது அலகு

ஜவ்வாது உற்பத்தி அலகு ஒன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இவ்வலகில் ஜவ்வாது பவுடர், அகர்பத்தி, சாம்பிராணி, சந்தன மாலைகள், மூலிகை பற்பொடி, மெழுகுவர்த்திகள், கற்பூரம், பன்னீர் மற்றும் இதர பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உற்பத்தி செய்யப்படும் மூலிகை பற்பொடிகள் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

6.7.2 நீலகிரி தைல அலகு

நீலகிரி மாவட்டம் உதகையில் தைலம் பதப்படுத்தும் அலகு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவ்வலகில், கூட்டுறவு சங்கத்தின் மூலம் பச்சைத் தைலம் கொள்முதல் செய்யப்பட்டு அதனை பதப்படுத்தி நீலகிரி தைலம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி தைலம், மென்தால், கற்பூரம் மற்றும் இதர மூலப்பொருட்களை கொண்டு “சுகப்பிரியா” என்ற பெயரில் வலி நிவாரண தைலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2020-2021-ஆம் ஆண்டில் ரூ.68.60 இலட்சம் மதிப்பிற்கு மேற்காணும் பொருட்கள் இவ்வலகுகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2021-2022-ஆம் ஆண்டு ஜூலை’2021 வரை ரூ.10.42 இலட்சம் மதிப்பிற்கு இதர பொருட்கள் இவ்வலகுகளில் உற்பத்தி செய்து ரூ.92.92 இலட்சம் மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.